இலங்கையில் தமிழ்ப் பௌத்தம் | பௌத்தச் சிற்பங்கள் ஊடாக அறியப்படும் இலங்கை - ஆந்திர உறவுகள் : பகுதி 1 | பரமு புஷ்பரட்ணம்
Description
'இலங்கையில் தமிழ் பௌத்தம்' என்னும் இப் புதிய தொடரில் ஏறக்குறைய 12 வரையான ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்கவுள்ளோம். இக்கட்டுரைகளில் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை ஆங்கிலத்தில் எழுதப்பட்டு ஆய்விதழ்களில் பிரசுரிக்கப்பட்டவை. ஆங்கிலக் கட்டுரைகள் மொழிபெயர்ப்பு, தழுவலாக்கம், சுருக்க அறிமுகமும் விமர்சனமும் என்ற மூவகையில் அமைவனவாக இருக்கும். சி. பத்மநாதன், ஆ. வேலுப்பிள்ளை, பீட்டர் ஷல்க், சிவா. தியாகராஜா, பரமு. புஷ்பரட்ணம், அகிலன் பாக்கியநாதன் ஆகியவர்களின் கட்டுரைகள் இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலையை விளக்குவனவாக அமையவுள்ளன. இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலை, இலங்கையின் கடந்த கால வரலாறு முழுவதும் மேலாதிக்கம் பெற்றுள்ள சிங்கள பௌத்த இனக் குழுமத்தின் முழுமையான உரிமையும் உடமையும் என்ற நோக்கிலான கருத்தியலுக்கு மாறுபட்டது என்று சுருக்கமாகக் கூறலாம். சுனில் ஆரியரட்ண, ஜி.வி.பி. சோமரத்தின, எலிசபெத் ஹரிஸ் ஆகிய மூன்று ஆய்வாளர்களின் கட்டுரைகளும் இத்தொடரில் இடம்பெறவுள்ளன. இம் மூவரது கட்டுரைகளும் சிங்கள பௌத்த நோக்கு நிலை - தமிழர் நோக்கு நிலை என்ற இரண்டையும் விமர்சன நோக்கில் புரிந்துகொள்ள உதவுவன.